ஏப்ரல் 28, 2007

பதிவு மேம்பாட்டுக் கருவி பீட்டா அல்லது வெட்டியாய்ச் சுட்டவை

Posted in நுட்பம், பீட்டா இல் 2:46 பிப by பொன்ஸ்

புரட்சிப் புரோக்ராம்மர் குழலி, கருவிப்பட்டை சேர்க்கும் பக்கத்தை வெளியிட்டதிலிருந்தே, அதில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். களத்துமேட்டில் நிறைய வேலை இருப்பதாக சொல்லியே நழுவிக் கொண்டிருந்ததால், நானே கொஞ்சநஞ்ச ஜாவா அறிவைச் சோதிச்சு பார்க்கிறதுன்னு இறங்கியாச்சு.

கணினியில் எனக்குப் பிடிக்காத மொழி என்றால் அது ஜாவா ஸ்க்ரிப்டிங் தான். HTML, ஜாவா ஸ்க்ரிப்டிங், சுலபமாக இருப்பதாலோ, அல்லது தனக்கு என்ன பிரச்சனை என்று தானே சொல்லத் தெரியாத குழந்தையாகவே இருப்பதாலோ, நான் முறையாக கற்காத மொழி என்பதாலோ, சுத்தமாக பிடிக்காது. இப்ப குழலி புண்ணியத்தில் அந்தக் கொடுமையையும் எழுதிப் பார்த்தாச்சு..

குழலியின் பழைய பக்கத்திலிருந்து நிரலி எடுத்து மேம்படுத்தி இருப்பது தான். மேம்பாடு என்றால், அதிலாவது ஏதாவது புதுசா செய்திருக்கிறேனோ என்று நினைத்துக் கொள்பவர்களுக்கு: அப்படியெல்லாம் புதிதாக ஒன்றுமில்லை. எல்லாம் சுட்ட பழங்கள் தான்

ஜெகத் எழுதி இருந்த நேரமும் நாளும் தமிழில் காட்டும் தமிழைசர் நிரலியை என் பதிவுக்காக இடும் போதே கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருந்தது. முதலில் ஒன்றிரண்டை விட்டுவிட்டு, அப்புறம் சரி செய்து, என்று இரண்டு மூன்று முறை வார்ப்புருவை திருத்த வேண்டியதாகிவிட்டது. அதனால், இந்த தமிழ்ப்படுத்தும் நிரலியையும் குழலியின் கருவிப்பட்டை மேம்பாட்டுப் பக்க நிரலியில் சேர்த்துப் புதுப் பக்கம் ஒன்றை உருவாக்கி இருக்கிறேன்.

தமிழ்மணம் கருவிப்பட்டை சேர்த்தல், பழைய ப்ளாக்கர் பதிவுகளிலிருந்து வந்த ஒருங்குறிப் பின்னூட்டங்களைச் சரியாக்குதல், புது ப்ளாக்கரில் நாளும் நேரமும் தமிழில் காட்டுதல் – இவை மட்டுமே இன்று இந்தக் கருவியில் செய்யக் கூடியவை.

மேலும் செய்ய எண்ணி இருப்பவை:
1. தேன்கூட்டின் பின்னூட்ட திரட்டி நிரலியைச் சேர்த்தல்
2. தன்னுடைய பதிவுகளில் தானே இடும் பின்னூட்டங்களை வேறு நிறத்தில் காட்டுதல் (author comment highlighting – என் பதிவில் வருவது போல்)
3. முந்தைய இடுகை, அடுத்த இடுகை போன்ற ஆங்கில சுட்டிகளைத் தமிழாக்குதல்
4. தீபாவின் நிரலி மூலம் யாஹூ சிரிப்பான்களைப் பதிவில் காட்டுதல்.

இவை தவிர, தற்போது இந்தப் பதிவு மேம்பாட்டுக் கருவியில் எனக்குத் தெரிந்த ஒரு பிரச்சனையும் இருக்கிறது:
ஏற்கனவே தமிழ்மணக் கருவிப்பட்டை உடைய வார்ப்புருவை உள்ளிட்டு (தவறுதலாக)மீண்டும் கருவிப்பட்டை இடச் சொன்னால், இரண்டாம் முறையாகவும் பட்டையை இட்டுவிடுகிறது இந்தப் பக்கம். மனித தலையீடில்லாமல், மேம்படுத்த வேண்டிய பகுதி ஏற்கனவே வார்ப்புருவில் இருக்கிறதா இல்லையா என்று கண்டறிந்து தானே செய்யக் கூடிய வகையில் இதைக் கொஞ்சம் மாற்றவும் வேண்டும்.

இது தவிர வேறு பிரச்சனைகளும் இருக்கிறதா என்று நண்பர்கள்/பயனர்கள் கண்டறிந்து சொன்னல் உதவியாக இருக்கும். உங்களுக்குத் தேவை என்று தோன்றும் வேறு மேம்பாட்டுச் சேவைகள் இருப்பின் அதையும் சொல்லுங்கள். இவற்றைத் தெரிந்து கொள்ளவும், முதல் அறிமுகமாகக் கொடுக்கவுமே இந்த பீட்டா(சோதனை) பதிவு.

Advertisements

அடுத்த பக்கம்