03.09.07

அம்பாரியில் வந்த சுடர்

.... இங்கே பதியப்பட்டது சுடர், பதிவுகள், பொன்ஸைப் பற்றி இல் 11:53 மு.பகல் by பொன்ஸ்

சுடர் தொடங்கிய பொழுது சாகரனிடமிருந்து ஒரு மடல் வந்திருந்தது. அதுவே அவருடனான கடைசி பேச்சுவார்த்தையாக இருக்கும் என்று நினைத்து கூடப் பார்க்க முடியவில்லை. வெகுநாள் ஆகிவிட்ட போதும், அவர் நம்மிடையே இல்லை என்பதை இன்றும் நம்ப முடியவில்லை. “இன்றில்லை என்னும் பெருமை” உடைத்த உலகம் என்பதன் பொருளை நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கிறது நான் படிக்கும் ஒவ்வொரு சுடரும்; என் நெஞ்சார்ந்த அஞ்சலிகள் சாகரன்…

மங்கை கையில் சுடர் போன போது அங்கிருந்து வேறு யாருக்காவது போகும் என்று நினைத்திருந்தேன். ஆனால், என் கையில் கொடுத்து விட்டார்கள்.. ம்ம்ம்.. நீங்க கொடுத்து வச்சது அவ்வளவு தான் :)

1) உங்க அனுபவத்தில, பணி புரியும் பெண்களுக்கு ‘Glass ceiling’ இருக்கிறத நீங்க உணர்ந்து இருக்கீங்களா?… அப்படி இருந்தா அத தாண்டி வர பெண்கள் எடுக்க வேண்டிய முயற்சிகள்.

Glass Ceiling என்ற சொல் எனக்குப் புதிது. அகராதி பார்த்து தெரிந்து கொண்ட பொருள்: “பெண்கள் அல்லது சிறுபான்மையரைப் பெரிய பதிவிகளுக்கு வரவிடாமல் தடுக்கும் கண்ணுக்குத் தெரியாத கண்ணாடித் திரை” என்கிறது ஆன்ஸர்ஸ்

கண்ணுக்குத் தெரியாத இது போன்ற திரைகள் எல்லா இடங்களிலும் இருக்கின்றன. முன்பே ஒரு பதிவில் சொன்னது போல், கொடுத்த வேலையை முடிப்பது, முடிக்காதது என்பதைத் தாண்டி, வெகு நேரம் இருந்து வேலை செய்பவர்கள் நல்ல பணியாளராக அடையாளம் காட்டப்படும் இடம் இந்த மென்பொருள் துறை. ஆக, திருமணத்திற்கு முன்னர் இது போல் எத்தனை நேரம் வேண்டுமானலும் அலுவலகத்தில் இருந்து வேலை செய்யும் நமது பெண்கள் திருமணத்திற்குப் பின்னர் பல்வேறு காரணங்களால், இது போன்ற வெகுநேரம் வேலை செய்ய முடியாமல் போகிறது. ‘எப்படியும் கல்யாணம் செய்தால் விட வேண்டிய வேலை தானே!’ , ‘மேலாளர் சொல்வதை அப்படியே செய்வோம். நம்ம எதுக்கு அனாவசியமா யோசிக்கணும், கேள்வி கேட்கணும்?’ என்பது போன்ற மெத்தனங்களையும் அடிமை மனநிலைகளையும் தாண்டியும் கூட பல பெண்கள் இங்கே வெற்றிப்படிகளில் ஏறிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
வாடிக்கையாளர் நிறுவனங்கள், வெளிநாடுகள் செல்ல இயலாமை, கணவனின் பணியிட நெருக்கடிகளை முன்னிட்டு வேலையை துறக்க நிர்ப்பந்தம், குழந்தைகளைக் கவனிக்க சீக்கிரம் வீடு திரும்ப வேண்டிய நெருக்கடி என்பன போன்ற காரணங்களால், திருமணத்திற்குப் பின் பெண்கள் அடுத்த பிரமோஷன் மீது அதிகம் கருத்து செலுத்துவதில்லை. பணியில் மந்தமாக இருக்கும் ஆண்களுக்கும் இந்த பிரச்சனைகள் இருக்கும் என்றாலும், பெண்கள் என்று வரும் போது வீட்டுப் பிரச்சனைகள் தான் முக்கியமான காரணிகளாக இருக்கின்றன.

இவற்றிலிருந்து வெளிவர பெண்கள் என்ன செய்யலாம்? “உன் வேலை போல என் வேலையும் எனக்கு முக்கியம்” என்று கணவனிடமும், “உன் குழந்தைகளுடன் நேரம் செலவிடாமல் வேலை மட்டுமே வாழ்க்கை என்று நீ இருந்தால், நானும் அதையே செய்ய வேண்டிய அவசியமில்லை!” என்று மேலாளர், சக பணியாளர் என்று எல்லாரிடமும் இந்த மனநிலையை உருவாக்க வேண்டிய அவசியம் அவளுக்கு இருக்கிறது. இதை உருவாக்கி, வெற்றி பெறும் பெண்கள் எண்ணிக்கையில் குறைவானாலும், இருக்கிறார்கள் என்பதை மறுக்கலாகாது. என் அனுபவத்திலேயே அது போன்ற பெண்களைப் பார்த்திருக்கிறேன், என்னுடைய மேலாளர்களாக…

2) மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரிய பெண்களுக்கு படிப்பு மட்டும் இருந்தால் போதாது. ஆண்களுக்கே சில சமயம் சவாலா இருக்கும் போது, வேலைப் பளு, மன அளுத்தம், இவற்றை சமாளிக்க அவர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?
அறிவுரை என்று சொல்ல முடியாது; கூடியவரை வேலை நேரத்திற்குப் பின்னும் அலுவலகத்தில் பெஞ்சைத் தேய்த்தல், ஓசி இணையம், சினிமாச் செய்திகள், சீரியல்கள் என்று நேரம் வீணடிக்காமல், மனதுக்குப் பிடித்த, உடலுக்குப் புத்துணர்ச்சி ஊட்டும் பொழுது போக்குகளை வளர்த்துக் கொள்வது நல்லது. புத்தகம் படிப்பது, விளையாடுவது, சமைப்பது, நீச்சல், புது மொழி கற்றுக் கொள்வது, நண்பர்களுடன் விண்டோ ஷாப்பிங் என்று எது வேண்டுமானாலும் இருக்கலாம்.

3) சமூக விழிப்புணர்வோட சில நல்ல காரியங்களை செய்துட்டு வரீங்க- வாழ்த்துக்கள்..
அப்படியா?!! :)
அதை இன்னும் நல்லா, அனைவரையும் ஈடுபடுத்தி செய்யறதுக்கு ஏதேனும் திட்டம் வச்சுட்டு இருக்கீங்களா?
அப்படி பெரிய அளவில் யோசிச்சதில்லை மங்கை. கடற்கரையில் சுண்டல் விற்கும் சிறுவர்கள், உணவகக் குழந்தைத் தொழிலாளிகள், பஞ்சர் ஒட்டும் சிறுவர்கள், பேப்பர் கடையில் பார்க்கும் குழந்தைகள் என்று படிப்பு எட்டாக்கனியாக இருக்கும் குழந்தைத் தொழிலாளர்களுக்கு கல்வி கிடைக்க வழிசெய்ய வேண்டும் என்று ஒரு ஆசை உண்டு. பல நாட்களாக நினைத்துக் கொண்டிருப்பது இது, இன்னும் நேரம் வரவில்லை; யோசனை வடிவிலேயே இருக்கிறது. இயல்பாகவே எனக்குள் இருக்கும் சோம்பேறித்தனமும் ஒரு காரணம் என்று சொல்லலாம்.

4)கணினி தவிர உங்களை ஓரிடத்தில் உட்கார வைக்கும் வேறு விஷயங்கள்
புத்தகங்கள்.. பிடித்த புத்தகங்களுக்குள் மூழ்கிப் போவது ஒரு பிடித்த பொழுதுபோக்கு.

5) வலைப்பதிவு உலகில என்ன புதுமை செய்ய முடியும்…
தமிழ்வலைப்பதிவுகளைப் பொருத்தவரை புதிதாகத் தொடங்கியது போல் தான் உள்ளது. நிறைய மாற்றங்கள் மிச்சமிருக்கு; புதுமைகளும் தான்.
நுட்பத்தைப் பொறுத்தவரை, பிளாக்கரையும் வோர்ட்பிரஸ்ஸையும் தவிர வேற பதிவுக் கருவிகளே பெரிய அளவில் பயன்பாட்டில் இல்லை. இதில் தமிழ் வலைகருவிகள் வந்தால் நல்லா இருக்கும். இன்னும் திரட்டிகள், துறைசார்ந்த திரட்டிகள், அல்லது தன்வயப்படுத்தக் கூடிய திரட்டிகள்(பர்சனலைஸ்) தமிழுக்குத் தேவை. ‘பின்னூட்ட எண்ணிக்கை மட்டுமே பதிவின் சாரத்தை முடிவு செய்யக் கூடியதில்லை’ என்று தெரிந்தும் நாம் இன்னும் பின்னூட்ட எண்ணிக்கை அல்லது எழுதியவர்களின் பெயர் – இவற்றை நம்பியே ஒரு பதிவைப் படிக்கிறோம். இதைத் தாண்டி, நல்ல இடுகைகள் பல சமயம் அடையாளம் தெரியாமல் போய்விடுகிறது. பூங்கா போல இன்னும் பல இதழ்கள் வரலாம்; வரவேண்டும்.

பத்திரிக்கைகள் போல ஸ்டேடிக்கான ஊடகமாக இல்லாமல், ஒலி, ஒளி, படங்கள், படத் துண்டுகள்னு அசையக் கூடிய விதங்களில் கொடுக்க முடிந்த பதிவு ஊடகத்தை நாம் இன்னும் முழுமையாக புரிந்து, பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. மலைநாடனின் வானொலி போல, பினாத்தலாரின் ப்ளாஷ் விளையாட்டுகள் போல, அவ்வப்போது இணைக்கப்படும் படத்துண்டுகள் போல, இன்னும் பல நுட்பங்கள் பரவலாக்கப்படவேண்டும். இருக்கும் நுட்பங்களைப் பரவலாக்கல் ஒருபுறம் இருந்தாலும், குழலியின் கருவிப்பட்டி சேர்ப்பான் போல புதுநுட்ப கருவிகளும் ஒருபக்கம் அதிகரிக்க வேண்டியது அவசியம்.

இப்ப நிறைய பேர் புதுசா வர ஆரம்பிச்சு இருக்காங்க… இதன் எதிர்காலம் எப்படி இருக்கும்னு நினக்குறீங்க..
நிறைய பேர் வருவது மலர்ச்சியின், வளர்ச்சியின் அடையாளம். அதே ஐம்பது பேர், அதே பத்து பதினோரு விசயங்களைப் பற்றி ஒரே கோணத்தில் எழுதுவதை விட, தினம் புதுப் புது ஆட்கள் வரும் போது கோணங்களும் மாறுபடும். துறைசார்ந்த பதிவுகளின் தேவை இன்னும் தமிழில் இருந்து கொண்டே இருக்கிறது. மிருகவியல், தாவரவியலுக்கு ஒரு இயற்கை நேசி, மருத்துவத்திற்கு ஒரு எஸ்கே, அறிவியலுக்கு ஒரு வைசா, கூகிளுக்கு ஒரு பகீ, வேலைவாய்ப்புக்கு ஒரு ரவி என்று எல்லாமே “ஒரு”வாக இல்லாமல் இன்னும் அதே துறையைச் சேர்ந்த பலர் வரும்போது வெவ்வேறு பார்வைக்கோணங்களும் தமிழில் கிடைக்கும்.

ஆனால், ஏனோ புதிதாக வருபவர்கள் பின்னூட்ட எண்ணிக்கையைத் தாண்டி, யோசிக்காமல் இருந்து விடுகிறார்களோ என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. வலைப்பதிவுகள், நமக்கான, நாம் விரும்புவதைப் பேச வேண்டிய ஒரு ஊடகமாக, நம் குரலாக இல்லாமல், பின்னூட்டமிடும் வாசகர்களுக்கான காம்ப்ரமைஸாக, அவர்கள் விரும்புவதை மட்டும் எழுதும் இடமாக மாறிப் போவது தான் கொஞ்சம் வருத்தம். பின்னூட்டங்கள் ஒரு காரணம் என்று சொன்னாலும், வலைப்பதிவு என்ற சுதந்திரமான ஊடகத்தின், சில ஆரோக்கியமற்ற சூழ்நிலைகளாலும், திறந்த புத்தகமாக தத்தம் வலைப்பதிவுகளை வைத்துக் கொள்ள முடியாமல் போய்விடுகிறது. இந்தக் காரணங்களால் கூட புதியவர்கள் திசைமாறிப் போய்விடுவதாக எனக்குத் தோன்றுகிறது. கூடியவரை பதிவுகளைப் படிக்கும் புதியவர்களை எழுத ஊக்குவிப்பதைத் தவிர, நம்மாலும் இதற்கு ஏதும் செய்துவிட முடியாதென்பதே என்னுடைய எண்ணம். மாற்றம் என்பது அவரவர் உள்ளிருந்து வரவேண்டியது தான்.

*******************************************************

சுடர் வந்த பிறகு கண்டுபிடித்த முக்கியமான விசயம், கேள்வி என்று ஒன்று வந்துவிட்டால், பதில்சொல்வது சுலபம். ஆனால் எதுவுமே இல்லாத இடத்தில் கேள்விகளை உருவாக்குவது பெரிய வேலைதான். அதிலும் எதிராளி மனம் நோகாமல், பொதுவில் வைக்கப்படும் கேள்விகள் என்னும் போது, கொஞ்சம் கவனம் அதிகமாகவே தேவையாக இருக்கிறது. யாரை மாட்டிவைக்கலாம் என்று யோசித்துக் கொண்டே இருந்தபொழுது, நடுநாயமாக அமர்ந்து இருப்பவர் தான் நம் கண்ணில் சட்டென மாட்டியவர். அக்கா, அண்ணா என்று விளித்து பழகிக் கொண்டிருந்தாலும் நிஜமாகவே எனக்கு, ஒரு தமக்கையைப் போன்ற பாசம் காட்டும், தற்போது நட்சத்திரமாக மின்னிக் கொண்டிருக்கும் என் நதியக்காவுக்கு நகர்கிறது சுடர்.

1. நீங்கள் வந்த புதிதில், சென்னையை எப்படி உணர்ந்தீர்கள் என்பதை உங்கள் பதிவுகளில் படித்திருக்கிறேன். இன்றைக்கு சென்னையில் முக்கியமான தேவையாக, அடுத்து செய்யவேண்டிய மேம்பாட்டுக்கான பணியாக நீங்கள் எதைக் கூறுவீர்கள்?

2. தமிழகத் தொலைக்காட்சியில் நீங்கள் தொடர்ந்து பார்க்கும், உங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சி எது?

3. பெண்களுக்கான விழிப்புணர்வூட்ட சிறந்த ஊடகம் எது என்று நினைக்கிறீர்கள்?

4. எங்களுக்காக ஒரு நகைச்சுவைத் துணுக்கு சொல்ல முடியுமா? :)

5. வலைபதிவுகள் அளிக்கும் நண்பர் வட்டத்தைத் தாண்டி, பதிவுகள் மூலமாக வேறென்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்?

நதி, சுலபமான கேள்விகள் தான் கேட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். நட்சத்திரத்துடன் சுடராகவும் ஜொலிக்க சீக்கிரமே வந்து விடுங்களேன்..

அடுத்த பக்கம்