03.16.07

அப்படி எல்லாம் விட்ருவோமா?!

.... இங்கே பதியப்பட்டது பதிவுகள், பாகச இல் 4:10 பிற்பகல் by பொன்ஸ்

இதோ, அதோ என்று அந்தத் துயர சம்பவம் நடந்து இன்றோடு ஓராண்டு நிறைவு பெற்றுவிட்டது. அதாங்க, நான் வலைபதியத் தொடங்கிய சம்பவம் தான் \:D/

வெட்டியாக, ரொம்ப வெட்டியாக, ஒரு வேலையும் இல்லாமல், அலுவலகத்தில் சுற்றிக் கொண்டிருந்த ஒரு சமயம், சென்னை நெட்வொர்க்கில் கதை படித்துக் கொண்டிருந்தவள், அப்படியே கைதவறி கைப்புள்ளயின் பதிவு உரலைத் தட்டிவிட்ட பொழுது தொடங்கியது இந்தக் கிறுக்கு. அந்தச் சமயம் கைப்ஸ் தன் தம்பியுடன் அடித்த கூத்துகளை விலாவாரியாக எழுதிக் கொண்டிருந்தார். இயல்பாகவே நகைச்சுவை மிகவும் ரசிக்கும் நான் அதைப் படித்து, அதன்பின் அவருடைய அடுத்தடுத்த பதிவுகளுக்குள் விழுந்து எழுந்து, நாலு பதிவு விளையாட்டு உரலைக் கண்டுபிடித்தேன். விளையாட்டு கனஜோராக நடந்து கொண்டிருந்த அந்தச் சமயத்தில் ஒவ்வொருவரும் அடுத்தவரின் லிங்குகளைக் கொடுத்துக் கொண்டே வந்ததால், ஒவ்வொரு பதிவராக பிடித்துப் படித்துக் கொண்டே வர எனக்கும் ஏதுவாகிற்று.

எப்படியோ துளசிதளத்தில் தரையிறங்கிய போது, அக்கா அப்போதைய இந்தியச் சுற்றுபயணம் பற்றி பதிவெழுதிக் கொண்டிருந்தார். அதைப் படித்துவிட்டு, சரி, ‘துளசி அக்கா, சென்னை வந்தால் நாம் கூட அவரைப் பார்க்கலாமே!’ என்று நான் கேட்க, அவை ‘இரண்டு மாதம் முந்தைய பயண விவரம்’ என்று அவர் சொல்ல, நல்ல பல்பு அது :-) [அப்பா! இந்த சொல்லையெல்லாம் பயன்படுத்தி எத்தனை நாளாச்சு! பதிவிலக்கியத்தில், இதை மட்டும் எப்படி விட்டோம்?! ]

ஒவ்வொன்றாக தட்டி கடைசியாக பிளாக்கர் கணக்கு, தமிழில் எழுதுவது என்று எல்லாவற்றையும் பின்னூட்டங்கள் மூலமாக மட்டுமே கற்றேன். பிளாக்கரில் கணக்கு தொடங்கியாச்சு. வீட்டில் இருக்கும் பழைய கதைகளைப் பதிவிடலாம் என்று முடிவும் செய்தாச்சு. பு(ஆ)னைப்பெயர் கூட தேர்ந்தாச்சு. [பொன்ஸ் என்ற பெயர் வைத்த கதை தனிக்கதை.ஆரம்பத்தில் என்னுடைய பெயரை நெருங்கிய தோழியொருத்தி சுருக்கி அழைப்பது போல் poons என்று தான் வைத்திருந்தேன். அதைத் தமிழில் படித்த பினாத்தலார் பொன்ஸ் என்று மொழிபெயர்த்ததில், ரொம்ப பிடித்துப் போய் அப்படியே மாற்றியாச்சு. நடுவில் என் பாட்டி பெயரும் பொன்னம்மாவானதால், இந்தப் பெயரே விருப்பமானதாகிவிட்டது. நன்றி பினாத்தலார் ]. ஆனால், இத்தனை செய்தபின்னர் எழுதுவதில் ஒரு தயக்கம் இருந்து கொண்டே இருந்தது.

என் முதல் பதிவை இப்போது படித்தாலும் எனக்கே ஆச்சரியமாக இருக்கும். ரொம்ப ரொம்ப கொடுமையான பதிவு அது. அதை எழுதி முடித்து பப்ளிஷ் தட்டுவதா வேண்டாமா என்று வெகுநேரம் யோசித்து, ரொம்ப நேரம் கழித்து பிரசுரித்துவிட்டு ரியாக்ஷன்களுக்குப் பயந்து (ஏன் பயந்தேன் என்று இப்போதும் ஆச்சரியமாக இருக்கு), அப்படியே ஆறு மணி பஸ் பிடித்து வீட்டுக்கு ஓடி விட்டேன். மறுநாள் வரும் வழியெல்லாம் யோசித்துக் கொண்டே வந்தேன். “இதெல்லாம் தேவையா உனக்கு? எழுதுறவங்க எல்லாம் பெரியாளுங்க போலிருக்கு.. உனக்கெல்லாம் சரிபட்டு வருமா என்ன? பேசாம போய் அந்தப் பதிவை அழிச்சிடலாம்” என்று நினைத்து நான் வரவும், எனக்கு ரொம்ப பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. முத்து(தமிழினி), ராசா, ஜீவா, கீதாக்கா, கார்த்திக் ஜெயந்த் என்று நிறைய பேர் வந்து பின்னூட்டம் போட்டிருந்தார்கள்.. இவங்க பின்னூட்டங்கள் இல்லை என்றால், நீங்கள் ஒருவேளை இந்த அறுவையிலிருந்து தப்பியிருந்திருக்கலாம்.. ஏதோ உங்க கெட்ட காலம் ;) )

ஆரம்பம் தான் அப்படி பயந்து பயந்து.. ஆனால் பாருங்க, அடுத்தடுத்த நாட்கள், கன்னாபின்னாவென்று கண்டதையும் எழுதியதில், மார்ச் மாதமே ஒன்பது பதிவுகள்! ஏப்ரல், மே – இல் ஏதோ கொஞ்சம் படிக்கிற வேலைகள் இருந்ததால் குறைந்தது, மீண்டும் ஜுன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பரில் இரண்டு நாட்களுக்கு ஒரு பதிவு என்று விடுமுறை நாட்கள் தவிர்த்த மற்ற நேரங்கள் ரொம்ப பிஸியாக இருந்தது பிளாக்கர் :)

பதிவுலகத்தில் என் முதல் நண்பர் என்றால் பாலபாரதியைத் தான் சொல்ல வேண்டும். “இப்படிப் பயந்து பயந்து எழுதுதே இந்தப் பொண்ணு” என்று நினைத்தோ என்னவோ, “அடிக்கடி டெம்ப்ளேட் மாத்தாதீங்க”, “கவிதை எழுதாதீங்களேன் ப்ளீஸ்!” என்று ஏதேதோ யோசனை சொல்லிக் கொண்டிருந்தார் மனிதர். நம்மதான் எதையுமே சொன்னால் கேட்கிற சாதி இல்லையே.. யார் என்ன சொன்னாலும் விடாது கவுஜ என்ன, டெம்ப்ளேட் என்ன என்று எதையெதையோ செய்து கொண்டே இருந்தேன். பதிவுகளில் முதலில் போனில் பேசியதும் பாலாவிடம் தான். எனக்கு யோசனை சொன்ன நேரம், கை உடைத்துக் கொண்டு வீட்டில் இருந்ததாக கேள்விப்பட்டபோது பாவம் என்று நான் போன் போட, ‘அவர் பேச, நான் கேட்க; நான் கேட்க, அவர் பேச’ இப்படியாக எங்கள் முதல் போன் பேச்சு வார்த்தை ஒரு பக்கச் சார்பாகவே அமைந்தது. இப்ப வரைக்கும் பாலாவிடம் போன் போட்டு ‘ஹலோ’ தவிர ஒரு வார்த்தை நீங்கள் அதிகமாக பேசிவிட்டால், நீங்கள் பெரியாள் தான் :) ). யோசித்துப் பார்க்கும் போது, பா.க.சவின் விதை அப்போதே விழுந்துவிட்டதாகக் காண்கிறது. அது டார்மெண்டாக இருந்து கொஞ்சம் வளர்ந்து மூன்று இலை விடத் தான் ஆறுமாதங்கள் ஆகிவிட்டன (*)[அதுக்கப்புறம் அசுர வளர்ச்சிதான் :-j ]

அடுத்து குறிப்பிடத்தகுந்த வலைநண்பர் சிபி. கைப்புவைக் கலாய்க்க அப்போதெல்லாம் பார்த்திபன் என்ற வலைஞர் சும்மாவேனும் கலாய்த்துக் கொண்டிருப்பார். ஒரு முறை வ.வாசங்கத்தின் தங்கத் தலைவர் கைப்பு அண்ணனுக்காக, பார்த்திபன் பதிவில் ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டு வெளியே வந்தால், சிபியிடமிருந்து ஒரு மடல். “நல்லா சொல்லி இருக்கீங்க பார்த்திபனுக்கு” என்று.. நான் எதார்த்தமாக, “நீங்க தான் பார்த்திபனா?” என்றேன். “அட! எப்படிக் கண்டுபிடிச்சீங்க?” என்று அவர் கேட்க, “அட, நெசமாவே நீங்கதானா?!”, “நானாத் தான் உளறிட்டனா?” என்று ஆரம்பித்தது எங்களின் வருத்தப்படாத நட்பு! அப்படியே வருத்தபடாத வாலிபர் சங்கம், கலாய்த்தல் திணை, பாலபாரதியைக் கலாய்ப்போர் சங்கம் என்று நிற்காமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வீட்டுக்குள் சிபியின் மனைவியைக் கலாய்ப்போர் சங்கத்திலும் எனக்கு கொஞ்சமே கொஞ்சம் இடம் கொடுத்திருக்கிறார் மனிதர் :)

அலுவலக வேலைக்காக மதுரை செல்ல நேர்ந்தபோது, தருமி என்ற வலைபதிவர் பெயரை மட்டும் வைத்து அவருக்கு ஒரு மடல் தட்டி நாங்கள் செல்ல இருந்த கல்லூரியிலிருந்து கோயில் செல்ல வழிகேட்டுக் கொண்டிருந்தேன். வழி, ஆட்டோ சார்ஜ் முதற்கொண்டு சொன்னவர், தன்னுடைய செல்பேசி எண்ணையும் சேர்த்துக் கொடுத்திருந்தார். அப்போது ஜோசியம் பற்றி ஏதோ தொடர் எழுதிக் கொண்டிருந்த தருமியை, நான் பின்னூட்டங்களில் மட்டுமே படித்திருந்தேன். அதனால், போன் போட்டு, “நான் உங்க பதிவு படிச்சதே இல்லை” என்று சொல்வது கொஞ்சம் ஓவராக இருக்கும் என்று நினைத்து, அமைதியாக மதுரை போய், நல்ல பிள்ளையாய் இன்டர்வியூ எல்லாம் செய்து விட்டு திரும்பி வந்துவிட்டேன். அதன்பின்னர் கொஞ்ச நாள் கழிந்து, ஜோசியத் தொடர் முடிந்து என்னை மாதிரி பாமரர்களும் படிப்பது போல் தருமி ஏதோ எழுதப் போக, பின்னூட்டங்கள் மூலம் நட்பாகி, அப்படியே ஒரு ஆறு மாதம் கழித்துத் தன் பழைய மடல்களைச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்த போது, “நீங்க தானா அந்த மதுரைக்கு வழிகேட்டு வந்த ராஜாராம்?” என்றார்.. அந்தச் சமயத்தில் பயன்படுத்திக் கொண்டிருந்த மெயில் ஐடி அப்பா பெயரில் மட்டுமே இருக்கும், அதுவும் முழுதாக இருக்காது, அதனால் பேராசிரியர் குழம்பிப் போய்விட்டார் போலும் :)

அமெரிக்கா போய்ச் சேர்ந்து ஒரு வாரத்திற்குள் திடீரென்று ஒரு மடல், யாரோ ஒரு கந்தசாமியிடமிருந்து. “எங்கூருக்கு வந்திருக்கீங்களா பொன்ஸ்? ஏதும் உதவி தேவைன்னா சொல்லுங்க.. ” என்று.. யாருப்பா இது, என்று யோசித்தபடியே அவரது ப்ரோபைலைப் பார்த்தால், ஏ! யப்பா.. எத்தனை பதிவுகள்..இத்தனையும் பார்த்து இது இன்னார் என்று நான் புரிந்து கொள்ளவே நாளாகும் என்று நினைத்து சாதாரணமாக ஒரு பதில் அனுப்பி வைத்தேன். அதிலும், கனடாவில் உட்கார்ந்து கொண்டு ஒருவர், “எங்கூருக்கு வந்திருக்கீங்களா?” என்று என்னைக் கேட்டால், என்னவென்று நினைப்பது? வெட்டியாக வலைமேய்ந்து கொண்டிருந்ததால், அப்படியே கொஞ்சம் பிளாஷ்பேக் பதிவுகளாகப் படித்து, இந்த மதி கந்தசாமி புங்குடு தீவில் புட்பால் ஆடியவர் என்பதையும், ஆங்கிலப் படங்களுக்கு அழகாக விமர்சனம் எழுதுபவர் என்பதையும் கண்டு கொண்டேன். அப்படியே தேடிக் கொண்டே போனால், ஏதோ ஒரு பதிவில் இளவஞ்சி, ‘மதியக்கா’ என்று விளித்து வாங்கிக் கட்டியதைப் படித்த பொழுது தான் புரிந்தது, “அட, இது அண்ணாச்சி இல்ல, யக்கோவ்!” என்று :-”. மதி கலாய்ப்போர் சங்கத்தில் சேர தொடர்பு கொள்ளவும்: பொன்ஸ் பக்கங்கள் :)

யார் இன்னார் என்று தெரியாமலே பேசத் தொடங்கி, எங்கோ எப்போதோ என்னுடன் படித்தவர்கள், வேலை பார்த்தவர்களின் நண்பர்கள் என்று சுற்றிச் சுற்றிக் கண்டுபிடித்திருக்கிறேன் இந்த ஒருவருடத்தில். என்ன, என்னுடைய நேரடி நண்பர்கள் யாரும் இன்னும் தமிழ் எழுத வரவில்லை. ஏன், தமிழை இலவச இணையத்தில் கொடுத்தால் கூட படிக்க மறுக்கிறார்கள்.. விரட்டி விரட்டித் தான் படிக்க வைக்க வேண்டியிருக்கிறது.. அந்தவகையில் கொஞ்சம் வருத்தம் தான் :( பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள், பண்பலைகள் என்று எல்லாவற்றிற்கும் மாற்று ஊடகமாக வளர்ந்து நிற்கும் வலைப்பதிவுகள், புது வரவுகளுக்கு மிகவும் வசதியான களமாக இருக்கிறது. கண்டுபிடித்துப் படிப்பவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பது கொஞ்சம் வருத்தம். அதிலும் இணைய வசதி அதிகம் உள்ள சென்னை போன்ற பெருநகரங்களில் படித்து வளர்ந்தவர்கள், தமிழை ஒரு பாடமாகக் கூட படித்தறியாத காரணத்தால், பதிவுகள் போன்ற ஊடகங்களுக்கு வந்தாலும் ஆங்கிலத்தை அல்லது, தமிங்கிலத்தை விரும்புகிறார்கள். தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விருப்பமில்லாத சிலரும் எழுதத் தயங்குகிறார்கள் என்பது இன்னுமொரு தனிக் கதை.

ஒரே வருடத்தில் நான் வெற்றிகரமாகச் சந்தித்து பயமுறுத்திவிட்ட பதிவர்களைப் பட்டியலிட எண்ணியிருந்தேன். ஆனால், நடந்துவிட்ட மூன்று நான்கு சென்னை சந்திப்புகளில் பார்த்தவர்களையும், பதிவு என்பது ஒரு அறிமுகக் களமாக இருந்தாலும், குடும்ப நண்பர்களாகவே பழகிவிட்ட பதிவு நட்புகளையும் எந்தப் பட்டியலில் சேர்ப்பது என்று புரியாததால், வித்தியாசமான முன்னுரையுடன் அறிமுகமான நண்பர்களைப் பற்றி மட்டுமே இந்தப் பதிவில் எழுதி இருக்கிறேன்.

அடுத்த வருடமாவது ஏதாச்சும் உருப்படியா எழுத முடியுமான்னு பார்க்கிறேன்..

என்ன பார்க்குறீங்க? ஆமாமாம்..

தொல்லை தொடர்கிறது

அடுத்த பக்கம்