11.29.06
படம் காட்டுறேன்..
வெகு நாட்கள் முன்பே இட்டிருக்க வேண்டிய பதிவு இது. அமெரிக்காவில் பார்த்த ஒரு குகைப்பகுதியின் அறிமுகம். நான் தங்கியிருந்த ஊரிலிருந்து ஒரு மணிநேரப் பயணமான இடத்தில் இருந்தது இந்தக் குகை. மெரிமெக் குகைகள்(Meramec Caves) என்று பெயர். இதை ஜெஸ்ஸி ஜேம்ஸ் ஒளிந்திருந்த இடம்(Jesse James Hideout) என்றும் சொல்கிறார்கள்.
|
1870களில் அமெரிக்காவைக் கலக்கிய கொள்ளைக்காரனான ஜெஸ்ஸி ஜேம்ஸும் அவனது கூட்டத்தாரும் தங்க இடம் அளித்த குகையாம் இது.
அருகாமை வங்கிகளிலும் ரயில்களிலும் கொள்ளையடித்தபின் இந்தக் குகையில் வந்து தான் அவர்கள் ஒளிந்து கொள்வார்களாம்.
|
|
அருகாமைப் பள்ளிக்கூடத்துக் குழந்தைகள் செய்து கொடுத்த காந்தசக்தியைப் பயன்படுத்தும் பென்டுலம்:
உலகிலேயே இது போல் மொத்தம் பன்னிரண்டு பெண்டுலங்கள் தான் இருக்கின்றனவாம். அவற்றிலும் இது சிறப்பு மிக்கது, ஏனெனில் இந்த பெண்டுலத்தைச் செய்த குழந்தைகள் இதன் நிறையில் கைவைத்து விட்டார்களாம். அதனால், பெண்டுலம் ஒரு நிமிடம் போல தாமதமாக நகர்கிறதாம். |
|
இன்றைய “சவால்” மாதிரியான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் போல் 1950களில் அமெரிக்காவின் மிகவும் புகழ் பெற்ற தொகா நிகழ்ச்சி பீபிள் ஆர் ஃபன்னி(People are Funny). அந்த நிகழ்ச்சியின் பகுதியாக, குகையைச் சேர்ந்த கீழுள்ள பகுதிக்குள் தம்பதியராக ஐந்து நாட்கள் போல் தங்கியிருக்க வேண்டும்.
|
|
இடம் மொத்தமே இவ்வளவு தான். ஆனால், அங்கேயும் தங்கி இருந்து ஒரு ஜோடி பரிசு பெற்று பஹாமாஸுக்கு ஒரு மாதச் சுற்றுலா சென்று வந்தார்களாம்!
|
|
தண்ணீர் ஓடிக் கொண்டே இருக்கும் இந்தக் குகைப்பாறைகளில், ஓன்க்ஸ்(Onyx) என்னும் புதுவிதமான பாறைகள் உருவாகின்றன. அழகானவை இந்த ஓன்க்ஸ்.
ஓன்க்ஸின் இன்னுமொரு காட்சி
ஓன்க்ஸ் இன்னும் அழகாக இந்தப் பாறைகளின் மேல் விதவிதமாக, வெவ்வேறு நிறங்களில் வெளிச்சமடித்து பின்னணியில் பாடல் ஒன்றையும் ஓட விட்டு விடுகிறார்கள். பாடல் இசைக்கு ஏற்ப வெளிச்சமும் பாறைகளின் மீது விளையாடுகிறது. அழகான காட்சியாக இருக்கிறது.. ஏதோ நடனம் போல.. |
|
வைன் டேபிள் என்கிறார்கள் கீழே உள்ள குதிரையை
மூன்று கால்களால் நிற்கும் இந்தக் குதிரையும் நீருக்கடியில் உருவான ஓன்க்ஸ் பாறைகளால் ஆனது. திராட்சைக் கொத்துகள் போல் இருக்கும் இதன் உடலமைப்பைப் பார்த்துத் தான் இது ‘வைன்’ டேபிள் என்று அழைக்கப்படுகிறது.
உலகிலேயே மொத்தம் மூன்று இடங்களில் மட்டுமே இருக்கும் இந்த வைன் டேபிள் உருவாக்கம், இந்தக் குகைகளில் மட்டுமே தண்ணீருக்கு மேலே இருந்து மக்களுக்குப் பார்ப்பதற்குக் கிடைக்கிறது. |
அழகான இந்தக் குகைக்கு மொத்தம் ஏழு நிலைகள் இருக்கின்றன. இரண்டு நிலைகள் மட்டுமே நாம் பார்க்கக் கிடைக்கிறது. மற்றவை இன்னும் தண்ணீருக்கடியில் இருக்கின்றன போலும். குகையைச் சுற்றிப் பார்க்க இருபதிருபது பேராக அனுப்புகிறார்கள். வழிகாட்டிகளின் துணையில்லாமல் உள்ளே போகவே அனுமதிப்பதில்லை. வழிகாட்டி, சுற்றுலா எல்லாவற்றிற்குமாகச் சேர்ந்து $20 செலவு என்று நினைவு.
அமெரிக்காவின் எல்லா சுற்றுலா இடங்கள் போலவும் இங்கும் உள்ளே நுழையுமுன் நம்மை ஒரு நிழற்படம் எடுத்துக் கொள்கிறார்கள். திரும்பி வரும் போது அந்தப் படத்தை நினைவுக்காக நாமே பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். இல்லையென்றாலும் அவர்களே வைத்துக் கொள்கிறார்கள். (ஏதாவது பாதுகாப்பு ஏற்பாடாய் இருக்குமோ என்று எனக்குச் சந்தேகம்
)
இந்தக் குகையைப் பார்த்து முடித்து வந்த போது எனக்கு நம் விசாகப் பட்டினத்துக்கருகில் இருக்கும் போராக் குகைகள் நினைவுக்கு வந்தது. கிட்டத் தட்ட இதே போல், மூன்று நிலைகள் அடங்கிய, மற்றும் பல்வேறு விதமான பாறைகளுடன், அமெரிக்கக் குகையை விட இன்னும் அதிசயமான வரலாற்றுடன் இருக்கும் நமது போரா குகைகளையும் இதே போல் விளக்கும் சிற்றுலாக்கள் ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும். அரசாங்கத்துக்கும் வருமானமாயிற்று.










