01.24.07

தேடல் தொடர்கிறதே

.... இங்கே பதியப்பட்டது 'குமுதம்' பாணிக் கதை, சிறுகதை இல் 10:39 மு.பகல் by பொன்ஸ்

நான் பத்தாவது முறையாக அந்தத் தாளைப் படித்தேன்.

DR. சிவகுமார்,
9, பதி தெரு,
சேத்துப் பட்டு,
சென்னை.

‘கோழி ஒன்றைப் பிடித்து, அது கதறக் கதற, அதன் கால்களை மை டப்பாவுக்குள் அழுத்தி, அதன் பின் அந்த பார்சலில் ஓட விட்டிருப்பார்களோ?’ என்று சந்தேகம் வந்தது எனக்கு. அந்த அளவுக்குக் கோழிக் கிறுக்கல் என்ற பதத்திற்கே விளக்கமாக இருந்தது அந்த முகவரி. ஒன்பதாம் எண் வீடு தானா என்று பலமுறை சோதித்துவிட்டுக் கேட்டால், “இங்க செவக்குமாரு, செபக்குமாருன்னு யாரும் இல்லீங்களே..” என்று சொல்கிறார் அந்த வீட்டம்மாள்.

அந்தத் தெரு தான் பதி தெரு என்று பலபேர் உறுதி கூறினார்கள். ஆனால், அந்தத் தெரு மட்டுமன்றி, அதன் வலது, இடது பக்கத்து அடுத்தடுத்த தெருக்களில் கூட மருத்துவர்களின் வாசனையே இல்லை என்று பல்குத்திக் கொண்டிருந்த பெரியவர் சொன்னார்.

தெருமுனை டீக்கடையில் இன்றைக்கு நான் தான் சூடான விவாதப் பொருள்.
“அந்தாள் சரியாத் தாம்லே கேட்குறாரு.. பார்சலைத் தான் நான் கைல வாங்கிப் பார்த்தேன்லா” என்றும், “எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு பெருசு. ஏதாச்சும் புள்ள புடிக்கிறவனா இருக்கப் போறான், சாக்கிரதையா கவனிக்கோணம்” என்றும் என் காதுபடவே பேசிக் கொண்டிருந்தார்கள்..

“ஏன் சார், நீங்களாவது சொல்லுங்க, இது சென்னை தானே?” என்பதை மட்டும் தான் நான் கேட்கவில்லை. மற்ற எல்லா கேள்விகளையும் கேட்டாகி விட்டது.

இன்னும் நான் வழி கேட்காத ஒரே ஜீவன் அதோ அந்தத் திண்ணையில் உட்கார்ந்திருக்கும் சின்ன பையன் மட்டும் தான். பாவம், அவன் கையில் இருந்த பிளாஸ்டிக் பொம்மை சிகப்பா, பச்சையா என்று கேட்டால் கூட அவனுக்குத் தெரிந்திருக்காது. இப்போது போய் அவனிடம் பதி தெரு என்றால், டீக்கடைக்காரர்கள் ஒரு முடிவுக்கே வந்துவிடுவார்கள்.

இன்னும் கொஞ்சம் நேரம் போனால், “மரமே, டாக்டர் சிவகுமாரைத் தெரியுமா?”, “கொசுவே! சிவகுமார் வீடு எது?” என்று நான் விசாரிக்க வேண்டியது தான். கடைசி முயற்சி ஒன்று செய்துவிட்டு, பார்சலைத் திரும்பி அனுப்ப வேண்டும்..

கடைசி முயற்சி…, கடைசி முயற்சி? என்ன செய்யலாம்? ஆங்! பத்தாவதில் பொற்கைப் பாண்டியன் கதை படித்தது நினைவுக்கு வந்தது; அதைத் தான் செய்ய வேண்டும். ஒவ்வொரு கதவாகத் தட்டிக் கேட்டுவிட வேண்டியது தான். கை போனால் கஷ்டம் தான். எதற்கும் திருடன் என்று சந்தேகிக்கும் அந்த டீக்கடை ஆசாமியை ஒரு முறை திரும்பிப் பார்த்துக் கொண்டேன். வெகுநேரம் ஆனதால் எங்கோ போய்விட்டார் போலும், ஆளைக் காணவில்லை. நான் தைரியமாக போய் ஒன்றாம் எண் வீட்டின் கதவைத் தட்டினேன். நல்லவேளையாக அந்தத் தெருவில் முப்பத்தி ஓரு வீடுகள் தாம் என்பது எதேச்சையாக நினைவுக்கு வந்து ஒருவித நிம்மதி அளித்தது.

கதவைத் திறந்தவருக்குச் சுமார் முப்பது முப்பத்தியைந்து வயதிருக்கலாம். முன்வழுக்கை வேறே. “ஏன் சார், டாக்டர் சிவகுமார்ங்கிறவரு.. இந்த வீட்ல இருக்காருங்களா?”

“டாக்டரா?” தொடங்கிவிட்டார். இனிமேல் இல்லை என்பதை நீட்டி முழக்கிச் சொல்வார். ஏமாற்றத்திற்குத் தயார் செய்தபடி “ஆமாம் சார்” என்றேன்.

“இந்தத் தெரு தானுங்களா?”

தலையாட்டினேன். வாய்திறக்கும் பொறுமை இருக்கவில்லை.

“இந்தத் தெருவில இருக்கிற ஒரே சிவகுமார் நான் தான். ஆனா, நான் டாக்டர் இல்லையே.. ப்ளம்பர். அதான் குழப்பமா இருக்கு!” என்றார் அவர்..

குழப்பம் எனக்கும் தொற்ற, அவசர அவசரமாக அந்தப் பார்சலை எடுத்து அவரிடம் நீட்டினேன். “இந்தத் தாளைப் பாருங்க..”

படித்தவர் பெரிதாகச் சிரித்தார்.

“என்ன சார்?”

“இது எனக்கு வந்தது தான் சார். இது டாக்டர் சிவகுமார் இல்லை.. டி.ஆர். சிவகுமார். என்னுடைய இனிஷியல். ஏதோ அவசரத்துல புள்ளி வைக்காம விட்டுட்டாங்க போலிருக்கு! நம்பரையும் தப்பா எழுதிருக்காங்க…”

இன்னும் பெரிதாக அவர் சிரித்துக் கொண்டே போக, ஆளைக் கண்டுபிடித்த நிம்மதியும், அதுவரை அலைந்த களைப்புமாக, அவர் வீட்டு வாசற்திண்ணையில் தொப்பென்று உட்கார்ந்து சிரிக்கத் தொடங்கினேன்.

அடுத்த பக்கம்