01.18.07
தமிழ் பேசு தங்கக் காசு
மக்கள் தொலைக்காட்சியின் புதிய நிகழ்ச்சி “தமிழ் பேசு தங்கக் காசு“. பழைய சொல் விளையாட்டு போன்ற இந்த நிகழ்ச்சியைப் புது மெருகுடன் நடத்துபவர் ஜேம்ஸ் வசந்தன். தனித்தமிழ் விளையாட்டாக இருக்கிறது.
மொத்தம் மூன்று சுற்றுக்கள். முதல் சுற்றில் வெல்பவர்களுக்கு ஒரு தங்கக் காசும் ஆயிரம் ரூபாய் பணமும். அடுத்தடுத்த சுற்றுகளில் பரிசுப் பொருட்கள் இரட்டிப்பாகின்றன. ஆக மொத்தம் ஆறு தங்கக் காசுகள், தமிழ் பேச. மற்ற சேனல்களின் ஆங்கில நிகழ்ச்சிகளுக்கு [தமிங்கிலம் என்று சொல்லும் அளவுக்குக் கூட இப்போ தமிழ் இல்லையே அவற்றில்
] இன்னும் அதிகமாகவே தங்கம் கொட்டும் நிலையில், தமிழ் பேசித் தங்கம் வெல்ல எத்தனை பேர் தயாராக இருப்பார்கள் என்று பொறுத்து தான் பார்க்க வேண்டும்.
முதல் சுற்றில் சுமார் இரண்டு நிமிடம் ஜேம்ஸ் வசந்தனுடன் உரையாட வேண்டும்,
-> ஒரே வார்த்தையை மூன்று தடவைக்கு மேல் பயன் படுத்தாமல்
-> ஒரே சொல்லில் பதில் சொல்லாமல்
-> தொடர்ந்து மூன்று வினாடிகளுக்கு மௌனம் காக்காமல்
-> ஆங்கிலம் கலக்காமல்.
கடைசி விஷயம் மட்டும் தான் சுலபமாக இருக்கிறது, முன்பே பழகிக் கொண்டு வருவதால். பழைய வார்த்தை விளையாட்டு போல் போட்டியாளரை ஒரே சொல்லில் சிக்க வைக்கும் முயற்சியில் ஜேம்ஸ் வசந்தன் ஈடுபடுவதில்லை. மிக மிக இயல்பாக பேசிச் செல்கிறார். ‘சொந்த ஊர் திருச்சி’, ‘படித்த ஊர் திருச்சி’ என்று இரண்டு முறை சொல்பவரிடம், அடுத்ததாக திருச்சியைப் பற்றியோ, ஊரைப் பற்றியோ கேட்டு மூன்றாவது, நான்காவதில் சிக்க வைக்கும் முயற்சிகள் செய்வதில்லை. அதனால், பேச்சில் ஈடுபட்டு சொற்களின் எண்ணிக்கையை மறந்து ஏமாறுவது போட்டியாளருக்குச் சுலபமாக இருக்கிறது. வசந்தன் கூட இந்தக் கணக்கு வைத்துக் கொள்ளாமலே பேசுகிறார். வசந்தனைத் தவிர இன்னுமொரு பேராசிரியரை இந்த உரையாடலைக் கவனித்து நடுவராகும் முறையில் நியமித்திருக்கிறார்கள். நான் பார்த்த அன்று மூத்த கவிஞர் ஒருவர் (பெயர் மறந்துவிட்டேன்
) கூர்ந்து கவனித்து அவ்வப்போது ஒலிப்பானை அமுக்கி போட்டியாளர்களின் சாபத்தைச் சேகரித்துக் கொண்டிருந்தார்.
இரண்டாம் சுற்றில், ழகர, தகர, ரகர உச்சரிப்புகளால் நிறைந்த சொற்றொடர் ஒன்றைக் காட்டி அதை மனனம் செய்து முப்பது நொடிக்குள் எட்டு அல்லது பத்து முறை சொல்லச் சொல்கிறார்கள்.
“வாழைப் பழத்தில் வழுக்கித் தாழைப் புதிரில் விழுந்தாள் கிழவி மகள்” போன்ற பழகிய சொற்றொடர்களுடன்
“தாதி தூதோ தீது. தத்தை தூது ஓதாது” போன்ற சங்கப் பாடல் தொடர்களும் கொடுக்கப்படுகின்றன.
இது போன்ற சொற்றொடர்களின் பொருளை விளக்கிவிட்டு திரும்பிச் சொல்லச் சொல்லலாம். அல்லது போட்டிகளில் பங்குபெறுபவர்களாவது வாய்விட்டுப் பொருள் கேட்கலாம். இரண்டும் இல்லாவிட்டால் இந்தச் சுற்று தமிழ் பேசித் தங்கம் வெல்வதை விட “மனப்பாடம் செய்தால் தங்கம் கிடைக்கும் ” என்று மாறிவிடும் ஆபத்திருக்கிறது.
“புக்கு தெக்கு புக்கு
செக்கு தெக்கு செக்கு”
என்ற சொற்பயிற்சி எனக்குப் புரியவே இல்லை. யாருக்காவது புரிகிறதா?
இறுதிச் சுற்று, ஆங்கில, வடமொழிச் சொற்களுக்குத் தனித்தமிழ்ச் சொற்களைக் கண்டு கூறுவது. இது கொஞ்சம் சுலபமான சுற்றாகத் தான் தெரிகிறது – சுலபம் என்ற சொல்லுக்கே தமிழ்ச் சொல் என்ன என்று கேட்கும் வரை! சுலபம், ஜாக்கிரதை போல் தினசரி பயன்படுத்தும் சொற்களையே தமிழில் சொல்லுங்கள் என்றால் அந்த குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் கொஞ்சம் கடினமான வேலையாகத் தான் தோன்றுகிறது.
நான் பார்த்த உழவர் தினச் சிறப்பு நிகழ்ச்சியில் நிர்மலா பெரியசாமி பங்கு பெற்றார். நிர்மலாவின் குரலை மட்டுமே கேட்டு, சலித்தே போயிருந்த எனக்கு, அவர் நொடிக்கொரு தரம் புன்னகைத்துக் கொண்டே இருந்தது மனதைக் கவர்ந்து விட்டது. பதில் தெரியாத கேள்விகளுக்கு அழகாகச் சிரிக்கிறார். அவருடைய மகன் மூன்றாம் வருடம் கல்லூரியில் படிக்கிறான் என்பதை நம்பவே முடியாமல் சந்தூர் விளம்பரம் போல் இருந்தது. அடுத்த முறை போட்டி வைக்கும் போது நிர்மலா சிரிக்கவும் தனியான நேரம் ஒதுக்கப் போவதாகச் சொல்லி கலாட்டா செய்தார் ஜேம்ஸ் வசந்தன்.
நேற்றைய நிகழ்ச்சியில் ஒன்றாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் பங்கெடுத்தனர். “ஸ்கூலுக்கு தமிழில் என்ன?” என்றால், “ஸ்கூல், தமிழ் தானே?” என்று எதிர்க்கேள்வி கேட்கிறார்கள்! “ஃபேன் ஆங்கிலமா தமிழா?” என்று வசந்தன் கேட்டதற்கு, “ஆங்கிலம்னா?” என்று அற்புதமாகக் கேட்டு திகைக்க வைத்துவிட்டனர். வாழ்க பெற்றோர்.
இத்தனை குளறுபடிகள் இருந்தாலும், இரண்டாவது சுற்றில் மனப்பாடப் பகுதியை உச்சரிப்பு பிழையில்லாமல் சொல்லிக் காட்டினர். அதிலும் ஒரு சிறுவனுக்குத் தமிழே படிக்கத் தெரியவில்லை. வசந்தன் சொன்னதைக் கேட்டே அவனும் அழகாக மனப்பாடம் செய்து ஒப்பித்தான். நமது பள்ளிகள் மொழி கற்றுக் கொடுக்கிறதோ இல்லையோ மனனம் செய்வது எப்படி என்று நன்றாகவே சொல்லிக் கொடுக்கிறது, மூன்றாம் வகுப்பு தாண்டுவதற்குள்ளாகவே!
நிகழ்ச்சியைப் பார்த்து முடித்துவிட்டு விஜய் தொலைக்காட்சிக்கு மாற்றினால், “திஸ் இயர் தலைப் பொங்கல் கொண்டாடும் செலிப்ரிடீஸ் நிறைய!” என்று திவ்யதர்ஷினி சொல்லவும், ஏதோ வேற்று மொழிச் சானலுக்கு மாறிய தோற்றம் ஏற்பட்டுப் போனது