01.06.07

Happy Feet

.... இங்கே பதியப்பட்டது அசைபடம், விமர்சனம் இல் 8:53 பிற்பகல் by பொன்ஸ்

கடைசியாக நானும் ஹாப்பி பீட் என்னும் சந்தோஷக் குதிப்பைப் பார்த்துவிட்டேன். Finding Nemo மாதிரியே ஜாலியான படம்.

அண்டார்டிகா கண்டத்து பெங்குயின்களும், அவற்றின் மீன் தட்டுப்பாடும், மனிதர்கள் பெங்குயின்களின் தட்டுப்பாட்டை உணர்ந்து தமது ஆழ்கடல் மீன் பிடிக்கும் வேலைகளைக் குறைத்துக் கொள்வதும் தான் படத்தின் முக்கிய கதை. கதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள தெக்கிக் காட்டானின் பதிவைப் பார்க்கலாம்.

பலரும் சொல்லிவிட்டது போல், இசை மிக மிக அழகு. கொள்ளை கொள்ளும் பாடல்கள். அத்துடன் நடனமும்.

முக்கிய விஷயமான ஆழ்கடல் மீன்பிடித்தலைத் தவிர எனக்கு இந்தப் படத்தில் தென்பட்ட சில விசயங்கள்:

  • Disabled Penguin ஆக சித்தரிக்கப் படாமல் Differently Abled Penguin ஆக முன்னிறுத்தப் படும் மம்பிளின் சந்தோசக் குதிப்பு.
  • பெங்குயின் மொழி என்று பிரித்துச் சொல்வதன் மூலம் அது மனிதர்களுக்குப் புரிவதில்லை என்று உண்மை காட்டியிருக்கும் விதமும் அழகு.
  • பெங்குயின் கார்ட்டூன்கள் வழக்கம் போல் அழகு. முக்கியமாக கதாநாயகனைப் பிரித்துக் காட்ட முதுகில் ஒரு வெள்ளை நிறமும், அவனது அம்மாவைப் பிரித்துக் காட்ட மச்சம் வைத்திருந்த விதமும் எப்படித் தான் இப்படி எல்லாம் யோசிக்கிறார்களோ என்று தோன்றியது
  • வித்தியாசமான திறமையுள்ள மம்பிளை அதன் கூட்டத்தார் ஏற்காமல் போவது கூட மனித வாழ்க்கைக்கு மிக மிக அருகில் உள்ள விஷயமாக இருக்கிறது.
  • “எல்லாரிடமும் ஒரு நல்ல பக்கம் இருக்கும், அந்தப் பக்கத்தில் அணுகினால், நாம் சொல்வதைக் கேட்க வைக்க முடியும்” என்ற மம்பிளின் அணுகுமுறை இன்னுமொரு அற்புதமான பாடம்.
  • பெங்குயின் பற்றிய புனைவிலும் லவ்லேஸ் போன்ற போலிச் சாமியார்களைச் சேர்த்து மூடநம்பிக்கைகளையும் சாடியுள்ளமை மற்றொரு அழகு
  • Alien என்று பிற கிரக, பிற சூரிய குடும்ப உயிர்களை நாம் அழைத்தால், இதே பூமியில் இருக்கும் ஒரு உயிரினம்/பல உயிரினங்கள், மனிதனையும் alienஆக நினைக்கக் கூடிய அளவில் தான் நாம் நமது சக பூமிவாசிகளை மதிக்கிறோம் என்றும் நிறுவியிருக்கிறார் கதாசிரியர்.
  • உயிர்க் காட்சியகத்தில் அடைபட்டுப் போகும் மம்பிளின் பின்னணியில் “இன்னும் மூன்று மாதத்தில் அவன் குரலை மறந்துவிடுவான்; ஆறுமாதத்தில் அடைபட்டதன் மூலம் பைத்தியமாகிவிடுவான்” என்று ஒலிப்பதைக் கேட்கையில் நமது உயிர்க்காட்சியகங்களில் அடைபட்டுக் கிடக்கும் விலங்குகளும் இப்படித் தானே சுதந்திரம் இழந்து பைத்தியமாகி இருக்கும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆறு மாதம் முன்னால் நானே பார்த்து ரசித்த பெங்குயின்களைப் பார்க்காமல், அந்த உயிர்க்காட்சியகத்திற்கு என்னளவிலாவது ஊக்கம் கொடுக்காமல் இருந்திருக்கலாமோ என்றும் தோன்றியது.
  • எப்படியும் படம் பார்த்து முடிக்கும் போது, “ஆக, இப்படி ஏதாவது சந்தோஷக் குதிப்பு, போன்ற வித்தியாசமான செயல்தன்மை இருந்தால் தான் இயற்கையின் எல்லா விலங்குகளையும் உயிரோடு இருக்க விடப் போகிறானா மனிதன்?!” என்ற கேள்வி திரும்பி வரும் வரை ஒலித்துக் கொண்டே இருந்தது..

    தொடர்புள்ள பதிவு: Happy Feet பற்றிய அஞ்சலியின் பார்வை