12.03.06

சரவணபவனுக்குப் போட்டியாக?

.... இங்கே பதியப்பட்டது நட்சத்திரப் பதிவுகள, விமர்சனம் இல் 9:55 மு.பகல் by பொன்ஸ்

நினைவு தெரிந்த நாள் முதல் சென்னையில் ஹோட்டல் சாப்பாடு என்றாலே சரவணபவன் தான். அவர்களின் உயர்தர சைவ உணவின் சுவைக்கு மாற்றாக ஒரு உணவகம் இருக்கிறதா என்றே தெரிந்து கொள்ள முயன்றதில்லை. குடும்பத்திற்கே மிகவும் பிடித்த இந்த உணவகத்தைப் பொறுத்தவரை நாங்கள் சாப்பிட்டு பார்க்காத கிளைகளே இல்லை எனலாம். “அசோக் நகர் பத்தாவது அவன்யூ எப்படிப் போகணும்?” என்பன போன்ற கேள்விகளுக்குக் கூட அந்தப் பகுதி சரவணபவனை அடையாளமாக வைத்து வழி சொல்வது தான் வழக்கம். அத்தனை தூரம் அந்த உணவகத்துடன் ஒன்றிப் போயிருந்த எங்கள் குடும்பத்தில் முதன்முதலாக ஆட்சேபக் குரல் எழுப்பியது நானே.

விண்ணைத் தொடும் அவர்களின் கட்டணங்களும், மிக மிக மெத்தனமாக வாடிக்கையாளரைக் கவனிக்கும் விதமும், இடவசதியே போதாத அவர்களது கிளைகளும், மற்ற குடும்பத்தவருடன் சில சமயம் மேஜையைப் பகிர வேண்டிய துர்பாக்கியத்தின் காரணமாக வெளியில் சாப்பிடும் மகிழ்ச்சியே காணாமல் போய்விடுவதும் என்று எத்தனை காரணங்களை நான் அடுக்கினாலும் எங்கள் வீட்டாரின் ஒரே ஆயுதம் சரவணபவன் உணவுகளின் மிக அருமையான சுவையும், அவர்கள் பேணிப் பாதுகாத்துவரும் சுத்தமும் தான்.

‘சுமார் 25 வருடங்களாக சென்னையின் சைவ உணவு சாம்ராஜ்யத்தின் முடிசூடா மன்னனாக விளங்கும் சரவணபவனுக்குப் போட்டியாக ஏன் இன்றுவரை எந்த உணவகமும் வரவில்லை?’ என்ற விவாதம் திடீரென்று எங்களுக்குள் எழுந்தது.

சரவணபவனுக்குப் போட்டியாக ஒரு உணவகம் தொடங்க வேண்டுமானால், என்னென்ன செய்ய வேண்டியதிருக்கும்?

அவர்களின் ஒவ்வொரு உணவகம் போலவும் அந்தந்தப் பகுதியில் நடுநாயகமான இடங்களைத் தேர்ந்தெடுத்து கடை திறக்க வேண்டும். இன்றைய சென்னையின் ரியல் எஸ்டேட்(தமிழில் என்னங்க?:)) விலைகளைப் பொறுத்தவரை இதற்கான வாய்ப்பு மிக மிக விலையதிகமாக இருக்கும். ஆனால், அது ஒன்று தான் காரணம் என்று புதுப்புது உணவகங்கள் புறப்படாமல் இல்லையே.

சுவையான, சுகாதாரமான உணவுக்காக அவர்கள் வலியுறுத்தும் உச்சபட்ச சுத்தத்தைப் பேணுவது இன்னுமொரு கடினமான போட்டியாக இருக்கும். ஆரம்பகாலத்திலேயே, அதாவது தொடங்கி ஒருவருடத்திற்குள்ளேயே லாபம் பார்க்க வேண்டும் என்று நினைக்கும் உணவகங்களால் இது முடியாது என்பது அப்பாவின் வாதம். “அதிகாலையில், முதல் லோடு காய்கறி வரும்போதே அவங்க ஆட்கள் யாராவது வந்துடுவாங்க. கொஞ்சம் கூட இடிபாடோ, குறையோ இல்லாத காய்கறியா தேர்ந்தெடுத்து எடுத்திட்டுப் போய்டுவாங்க” – கோயம்பேட்டில் காய்கறி வியாபாரம் செய்யும் அப்பாவின் நண்பரொருவர் சரவணபவன் ஊழியர்கள் காய்கறி தேர்ந்தெடுக்கும் விதத்தை வர்ணித்தார். நல்ல காய்கறி வாங்கிச் சமைக்க வேண்டும் என்பது மட்டும் தான் பிரச்சனை என்றால் அதைச் செய்வதற்கு ஏன் இன்னுமொருவர் வரவில்லை?

ஆரம்பத்தில், ஹாட் சிப்ஸ்காரர்கள் சரவணபவன் சாம்ராஜ்யத்தை அசைத்துப் பார்க்க முயன்றார்களாம். சரவணபவனின் லாப நஷ்டக் கணக்கு பார்க்காமல் சுத்தம் மட்டுமே பார்த்து இயங்கும் விதத்திற்கு போட்டியாக இயங்க முடியாமல் இப்போது அவர்களின் தரம் குறைந்து போய் விட்டதாம். என்ன தான் மிக நல்ல முறையில் தயாரிக்கப்பட்ட உணவாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் அதை வைத்துக் கொண்டிருக்காமல், அனாதை இல்லங்களுக்கோ, பிச்சைக்காரர்களுக்கோ கொடுத்துவிடும் சரவணபவன் ஹோட்டல்களுக்குக் நிகராக நஷ்டத்தைப் பற்றிக் கவலைப்படும் சராசரி ஆசாமிகள் பலமான போட்டியைக் கொடுக்க முடியாது தான்.

சரி, வெளியிலிருந்து ஒருவர், அனுபவமில்லாதவர் வந்து போட்டி போடுவது சிரமம் தான். ஓட்டலில் வேலை செய்பவர்களில் ஒருவரே தனியாக இயங்க முடிவெடுத்து வெளியேறினாலே நல்லதொரு புது உணவகம் கிடைத்துவிடாதா? அது கூட ஏன் நடக்கவில்லை? அப்படி என்ன செய்து சரவணபவன் தன் ஊழியர்களைத் தக்க வைத்துக் கொள்கிறது? என்பதோடு எங்கள் விவாதம் ஒரு தீர்மானமில்லா முடிவுக்கு வந்தது.

வேறு ஏதேதோ படித்துக் கொண்டிருந்தபோது கண்ணில் பட்டது தான் சரவணபவன் அதிபர் இராஜகோபால் அவர்கள் எழுதிய “வெற்றிமீது ஆசை வைத்தேன்” புத்தகம். புத்தகம் எனக்கான விடைகளைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் வாங்கினேன்.

அருமையானது தான், தனிவாழ்க்கையின் எந்தப் பகுதியையும் இதில் கொண்டு வராமல் சரவணபவன் கொஞ்சங் கொஞ்சமாக வளர்ந்த கதையை எழுதி இருக்கிறார். எழுத்து நடை அத்தனை சுவாரஸ்யமாக இல்லை. அத்துடன் அவ்வப்போது சந்தித்த நம்பமுடியாத சிக்கல்கள், சின்னச் சின்னத் திருப்பங்களுடன் இதை எழுதி இருந்தால், ஒரு “Made in America” போன்றோ, ஒரு “Pepsi to Apple” போன்றோ, புத்தகம் பெயர் பெற்றிருக்கும்.

புத்தகம் தெளிவித்த விடைகள்: தானே ஓட்டல் தொழிலாளியாக இருந்து முதலாளியானவர் என்பதாலோ என்னவோ, தொழிலாளிகள் பொதுவாக சந்திக்க நேரும் ஒவ்வொரு பிரச்சனையையும் தனித்தனியாக அணுகி இருக்கிறார் அண்ணாச்சி. அவர்களுக்கு வாடகைக்கு வீடுகள் பிடித்துக் கொடுப்பதாகட்டும், அவர்களின் பிள்ளைகள் படிப்புச் செலவுக்குத் உதவுதாகட்டும், ஊழியர்களுக்குத் தொலைபேசி வசதி செய்து கொடுப்பதாகட்டும், ஏதோ அரசு நிறுவன ஊழியர்கள் போலவே கவலையற்று வைத்திருக்க முயல்கிறார்கள். இது தவிர, பொங்கலுக்குப் புதுத் துணி எடுத்துக் கொடுப்பது, உடல்நிலை சரியில்லாத ஊழியர்களின் குடும்பத்திற்கு உதவுவது, ஆயுள்காப்பீடு போன்ற பாலிஸிகளை நிர்வாக செலவிலேயே எடுத்து வைப்பது, ஊழியர்களின் குழந்தைகள் திருமணத்திற்கு உதவுவது என்பன போன்ற திட்டங்கள் ஏதோ தனியார் நிறுவனத் திட்டங்களோ என்ற அளவுக்கு வியக்கவைக்கிறது.

எல்லாவற்றிலும் என்னைக் கவர்ந்த மூன்று விஷயங்கள்:

* ஊழியர்களின் குடும்பத்தில் யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவென்றே ஒருவரை வேலைக்கமர்த்தி இருக்கிறார்கள். அப்படி உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் இருப்பவர்களுக்கு மூன்று வேளை உணவு எடுத்துப் போகவும் இன்னுமொரு ஊழியர் அமர்த்தப்பட்டிருக்கிறார். இவர்களின் வேலையே ஆஸ்பத்திரிகளில் இருக்கும் சரவணபவன் ஊழியர்களுக்கு/குடும்பங்களுக்கு உதவுவது மட்டுமே!

* திருமணமான ஊழியர்களின் பெற்றோருக்கும் தனியாக பணம் அனுப்பும் புதுத் திட்டம் ஒன்றைச் சொல்கிறார்கள். நகரத்து வாழ்வில் செலவுகள் சமாளிக்க வசதியில்லாத ஊழியர்கள், ஊருக்குப் பணம் அனுப்ப விட்டுப் போய்விட்டால் அந்தப் பெற்றோர் படும் சிரமத்தை எண்ணி இந்தப் புதுத் திட்டமாம்!

* இவை தவிர, பன்னாட்டு நிறுவனங்கள் போல வெளிநாடு செல்லும் வாய்ப்பும் ஊழியர்களுக்கு அளிக்கப்படுகிறது. சிங்கப்பூரில் வருடாவருடம் நடைபெறும் ஓட்டல் சாதனங்கள் மற்றும் உணவு விடுதிகளுக்கான பொருட்காட்சிக்கு சுழற்சி முறையில் ஒவ்வொரு ஊழியராக அனுப்பவது மிகவும் கவர்ச்சிகரமான திட்டமாகத் தான் தெரிகிறது.

இப்படி எல்லாமே நிறுவனத்திலேயே கிடைக்கும்போது வெளியேறி, தனிக்கடை தொடங்க யாருக்கு மனம் வரும்? எப்படிச் சாத்தியப்படப் போகிறது? அத்துடன் இருபத்தியைந்து வருடங்களுக்குப் பின்னர் இனிமேற்பட்டு ஒருவர் இது போல் வெளியேறி புது உணவகம் திறந்து அதை நிலைநிறுத்தி, என்பதெல்லாம் எழுதுவதற்கும் பேசுவதற்கும் சுலபமாக இருப்பது போல் நடைமுறையில் இருக்காதல்லவா. எத்தனை பன்னாட்டு உணவகங்கள் வந்தாலும், இன்னும் இன்னும் பல்வேறு சைவ/அசைவ உணவகங்கள் இருந்து கொண்டே இருந்தாலும், சென்னை சரவணபவனில் கூட்டம் என்னவோ குறையாமல் அப்படியே இருக்கிறது.

சமீபத்தில் தனது உணவகங்களைப் புதுப்பித்திருக்கும் சரவணபவன், ஸ்வாதி என்ற பெயரில் குளிர்சாதன உணவறைகளையும் நிறுவியிருக்கிறது. சாதா உணவறைகளைவிட இரண்டு மடங்கு அதிக விலை வைத்து விற்கும் இந்தக் குளிர்சாதன அறைகளிலும் கூட்டம் அலைமோதிக் கொண்டே இருக்கிறது. வசந்தபவன், ஹாட்சிப்ஸ், அபூர்வா சங்கீதா என்று பல்வேறு உணவகங்கள் இருந்தாலும், சரவணபவனின் விலைப்பட்டியலும் வாடிக்கையாளர் கூட்டமும் அதிகரித்துக் கொண்டே வருவது கண்கூடு.

எப்படியும் சரவணபவனுக்குப் போட்டியாக ஒரு உணவகம் சென்னையில் வரவேண்டும், ஊருக்கெல்லாம் ஒரே வியாபாரியாக இருக்கும் இன்றைய சர்வாதீனம் (monopoly : நன்றி மா.சி.) மாறவேண்டும் என்பதே என் ஆசை. நிறைவேறும் வாய்ப்பு தான் இப்போது கண்ணுக்குத் தெரியவில்லை.