03.31.06

மெட்ராஸ் டு பெங்களூர்

.... இங்கே பதியப்பட்டது அனுபவம் இல் 9:31 மு.பகல் by பொன்ஸ்

சென்னையிலிருந்து டெல்லி, பூனா எல்லா இடமும் சுலபமாகப் போய்விடலாம். பெங்களூர் போகத் தான் ஒரே அடிதடி. அதிலும் பாருங்கள், வெள்ளி இரவு, ஞாயிறு மாலை என்றால், இரண்டு பக்கமும் பேருந்து, தொடர்வண்டி என்று எதுவும் கிடைக்காது. நான் வழக்கமாக முன்னமேயே பதிவு செய்து விடுவேன், இந்த அனுபவத்திற்குப் பிறகு.

அந்த வாரம் திங்கள் விடுமுறை. அந்தத் திங்கள் தான் சென்னையின் சரி பாதி ஜனத்தொகை பெங்களூர் போகிறது போலும், எனக்கு ஊர் திரும்ப டிக்கெட் கிடைக்கவில்லை. பேருந்தோ, தொடர்வண்டியோ எதிலேயாவது வந்து விடலாம் என்று முடிவு செய்து, தைரியமாக சென்னை போய் விட்டேன். ஞாயிற்றுக்கிழமை அன்று காலை சென்ட்ரல் சென்று மதியம் புறப்படும் வண்டிகள் எதிலாவது இடம் கிடைக்குமா என்று நானும் அப்பாவும் கேட்டோம்.குளிரூட்டப்பட்ட பெட்டிகள் உட்பட ஒன்றிலும் இடம் இல்லை என்று பதில் வந்தது.

சரி என்று சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு முன்னால் இருக்கும் தனியார் பேருந்து இயக்ககங்களுக்கு (ரொம்ப கஷ்டமா இருக்கு.. ட்ராவல்ஸ்னே சொல்லி இருக்கலாம்) அழைத்துச் சென்றார். தொடர்ந்த தேடல்களுக்குப் பின், ஒரு சாதா பேருந்தில், ஜன்னலோர இருக்கை கிடைத்தது. பொதுவாக தொலைதூரப் பேருந்துகளில், சுமார் நான்கு இருக்கைகளைப் பெண்களுக்கு ஒதுக்கி இருப்பார்கள். அவை அனைத்தும் நிரம்பிவிட, ஒரே ஒரு பொது இருக்கை மட்டும் இருந்தது.

“வேறு யாராவது பெண்கள் வந்தால் மாற்றி அமரவைக்க முயற்சிக்கிறோம், இல்லையெனில் அட்ஜெஸ்ட் செய்துகொள்ள வேண்டும்” என்ற விதிமுறைகளுடன், நூறு ரூபாய் அதிகம் வேறு கொடுத்து அந்த டிக்கெட்டை வாங்கினேன்.

திங்கள்கிழமை இரவு பஸ் ஏறும் போது வேறு பெண்கள் இருக்கை ஒன்றும் இல்லை என்று தெரிந்தது. அதற்காக நான் கவலைப்படவே இல்லை. அப்படி யார் நம்மை என்ன செய்து விடப் போகிறார்கள் என்று நேரே சென்று என் இருக்கையில் அமர்ந்தேன். அப்பா வேறு பெண்கள் இருக்கிறார்களா என்று பார்த்தார். ஒருவரும் இல்லாததால் ஓரமாக நின்று விட்டார்.

கிட்டத்தட்ட அரை மணி நேரம் போனபின், ஒரு தாயும் மகனும் வந்தார்கள். அந்தப் பையனுக்கும் என் வயது தான் இருக்கும். வீட்டிலேயே இருந்து படித்துவிட்டு கடந்த ஒரு வருடமாகத் தான் வேலைக்காக வேற்றூருக்குப் போகிறான் போலும். அதிலும் இந்த முறை தான் அவன் நண்பர்கள் இல்லாமல், தனியாகப் பயணிக்கிறான் போலும், அவன் அம்மா ஒரே அட்வைஸ் மழை.
“பர்ஸை பத்திரமா வச்சிக்கோ. ராத்திரி அசந்து தூங்கிடாதே.. பஸ் நிற்கும் போதெல்லாம் எழுந்து உன் பேக் இருக்கான்னு பாத்துக்கோ. தண்ணி பாட்டிலைக் காலி பண்ணிடாத.. கடைசி வரைக்கும் கொஞ்சமாவது வச்சிக்கோ. பக்கத்துல யாராவது உக்காந்து பிஸ்கெட் கொடுத்தா வாங்கிடாத..” அப்பப்பா.. என் அப்பா கூட நான் முதல் முறை தனியாகப் பயணம் செய்த போது இத்தனை நேரம் பேசியதில்லை. (இதெல்லாம், கீழே நின்று பார்த்துக் கொண்டிருந்த என் அப்பா சொன்னது)

இப்படி லோட் லோட்டாக அறிவுரை சொல்லி முடித்தபின் பையனும் ரொம்ப பயந்து பயந்து தான் வண்டியில் ஏறினான். மெதுவாக நடந்து வந்தவன், கடைசி இருக்கைக்கு முன் இருக்கை வரை வந்தான். என்னைப் பார்த்து, “27த் சீட் என்னுது” என்றான். பக்கத்து இருக்கையில் வைத்திருந்த என் பையை எடுத்து கையில் வைத்துக் கொண்டு உட்காரு என்பது போல் பார்த்தேன்.
அவனும் தன் பையை மேலே வைத்து விட்டு இது தான் தன் இருக்கை என்று அம்மாவிற்கு சைகை செய்தான். கீழே இருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த அவன் அம்மா கொஞ்சம் பயந்து விட்டார். டிக்கெட்டுகளைச் சரி பார்த்துக் கொண்டிருந்த ட்ராவல்ஸ்காரரை அணுகி, “லேடீஸ்சுக்கு தனி சீட் கிடையாதா?” என்றார்.

“யாருக்குங்க?” என்றார் அவர். அந்த அம்மா என்னைச் சுட்டிக் காட்டினாள்.
“ஏம்மா, டிக்கெட் எடுக்கும் போதே லேடீஸ் சீட்டுன்னு கேட்டு வாங்கக் கூடாதா? ” என்றார் அவர் அந்த அம்மாவிடமே.
“தெரியலயே… என் மகன் தான் அவங்க பக்கத்துல உக்காந்து போறான். அதான் கேட்டேன்” என்றார் அவர்.

“ஓ, அந்தப் பொண்ணு ஒண்ணும் அப்ஜெக்ட் பண்ணலை இல்ல? அப்போ சரி” என்று சொல்லி விட்டுத் தன் வேலையில் மூழ்கிவிட்டார்.

அந்த அம்மாளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. “வேற ஏதாவது பொண்ணுங்க சீட் இருந்தா மாத்தி குடுத்துர்றீங்களா?”

“பாக்கறேம்மா” என்றுவிட்டு அவர் போய் விட்டார். பையனைக் கீழே இறங்கி வரச் சொன்னார்.

“வேற சீட்டு பாத்து தரேன்னு சொல்றாங்க” என்றார்.

சொன்னபடியே மீண்டும் மீண்டும் முயற்சி செய்து பெண்கள் இருக்கையில் வராமல் போன ஒரு பெண்ணின் இடத்தை எனக்கு வாங்கிக் கொடுத்து விட்டார். வண்டியும் கிளம்பியது. அந்த அம்மாவுக்கும் மகிழ்ச்சி. அவர் மகன் என் சீட்டில் அமர்ந்து பை பை சொன்னான். எனக்குத் தான் கடுப்பு.. என் ஜன்னல் சீட்டைப் பறித்து விட்டார்களே என்று..

ஆனால், அந்த மகிழ்ச்சியும் கடுப்பும் ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. கிளம்பிய வண்டி மீண்டும் நின்று விட்டது. நான் அமர்ந்திருந்த இடத்திற்குரிய பெண் வந்து விட்டாள். என்னை மீண்டும் பின் சீட்டுக்குப் போகச் சொன்னார்கள். ஆக வண்டி கிளம்புமுன் மீண்டும் என்னைத் தன் மகன் அருகில் பார்த்த அந்தத் தாயார் முகம் சிறுத்துப் போயிற்று.

அந்த ஐந்து நிமிடத்தில் அவனைக் கீழே இறக்கி, மீண்டும் ஒரு ரவுண்டு உபதேசம் நடந்தது. “பேச்சு குடுக்காத.. முக்கியமா உன் பேர் எல்லாம் சொல்லாத.. முடிஞ்சா தூங்கற மாதிரி நடி அப்போ தான் அவளும் பேச மாட்டா” என்னவோ நான் அவர்களின் மகனைக் கடத்திக் கொண்டு போவதற்காகவே வந்தது போல்.

மெதுவாக வண்டி கிளம்பியது. நான் தூங்கலாமா என்று யோசித்துக் கொண்டே வேடிக்கை பார்த்தேன். “பெங்களூரில் வேலை செய்யறீங்களா?” என்றான் என் பக்கத்தில் இருந்த பையன்.

“ஆமாம்” என்றேன் அவன் அம்மா சொன்ன எச்சரிக்கைகளை நினைவுறுத்திக் கொண்டு..

“நானும் பெங்களூரில் வேலை செய்யறேன். அம்மா, அப்பா இங்க இருக்காங்க..”
அதான் தெரியுதே என்று சொல்ல நினைத்து, மெல்ல சிரித்து வைத்தேன்.

“அம்மா ரொம்ப ஆர்த்தடாக்ஸ் .. எப்போவும் இப்படித்தான் ஏதாவது சொல்லிக்கிட்டே இருப்பாங்க..” என்றான்.

சொன்னால் நம்ப மாட்டீர்கள், அதன் பின், பன்னிரண்டு மணிவரை அவன் தூங்கவே இல்லை, என்னிடம் பேசிக் கொண்டே வந்தான், என்னையும் தூங்க விடாமல். இந்த அழகிற்கு, யாராவது பெண்களே உட்கார்ந்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன். அவன் அம்மா ஏன் அவ்வளவு பயந்தார்கள் என்று இப்போது தான் புரிந்தது.

அத்தனை அறிவுரை சொல்லி அழுத்தி வைத்ததினால் தான் இப்படி அம்மா கண் மறைந்த பின் பேச வேண்டும் என்று தோன்றுகிறதா என்று கூட எனக்குத் தோன்றியது. எது எப்படியோ, நல்ல அம்மா நல்ல மகன்..

அடுத்த பக்கம்